
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருதிப்போட்டி முடிவடைந்து, இந்திய அணிக்கு சுமார் ஒரு மாதம் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. டி20 போட்டிகளுக்கான அணி வருகிற 26ஆம் தேதி அறிவிக்கப்படும் என்கிற தகவல்களும் வந்திருக்கின்றது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் யஷஷ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மூத்த வீரர்கள் வரிசையில் புஜாரா எடுக்கப்படவில்லை. இவருக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது நிரந்தரமாக வெளியில் அமர்த்தப்பட உள்ளாரா? என்கிற தகவல்கள் இதுவரை உறுதியாகவில்லை.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 938 ரன்கள் அடித்த புஜாரா, 32 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல் இன்னிங்சில் 14, இரண்டாவது இன்னிங்சில் 27 ரன்கள் அடித்திருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்பு இங்கிலாந்தில் கவுண்டி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அசத்திய புஜாரா மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.