
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மேலும் இந்த அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதுடன், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்தார்.
இதனையடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த ஊரான வதோதராவுக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி திறந்தவெளி பேருந்தில் வலம் வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி வரவேற்பளித்தனர். அதேசமயம் ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தற்போது பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இதையடுத்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடவுள்ளார். முன்னதாக இந்திய அணியின் அடுத்த கேப்டன் என பேசப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா தற்போது அணியில் ஒரு சாதரண வீரராக மட்டுமே அறிவிக்கப்பட்டு, அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்றுவிட்டதாக ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.