
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது முடிவடைந்துள்ள நிலையில், டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுபிக்கப்பட்ட டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் 5 இடங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதன்படி ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர்.
மேற்கொண்டு இங்கிலாந்தின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 4 மற்றும் 5ஆம் இடங்களில் தொடர்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறியதுடன் 8 மற்றும் 9ஆம் இடங்களுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.