
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 சர்வதேச போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் பதிவு செய்தார். இப்போடியில் சிறப்பாக பந்து வீசிய ஹார்திக், தனது நான்கு ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை முந்தி ஹார்திக் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் புவனேஷ்வர் 86 இன்னிங்ஸ்களில் 90 விக்கெட்டுகளையும், பும்ரா 69 இன்னிங்ஸ்களில் 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மூன்றும் மற்றும் நான்காம் இடங்களில் இருந்தனர்.
ஆனால் தற்போது ஹர்திக் பாண்டிய 110 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியளில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், யுஸ்வேந்திர சஹால் 96 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அதேசமயம் அர்ஷ்தீப் சிங்கும் இப்போட்டியின் மூலம் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.