அடிப்படை வசதிகளையாவது எதிர்பார்க்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்த முறை இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரும் போது, பயணம் உள்ளிட்ட வசதிகளை திட்டமிட்டு செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சம் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அரைசதத்தால் 50 ஓவர்களில் 350 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தாக்கூர் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரின் வேகத்தில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
Trending
இந்த வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தால், எவ்வளவு சோகமடைந்திருப்போம் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். எங்கள் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை அழுத்தமான நேரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே இந்திய அணியின் முன்னணி வீரர்கள். ஆனால் ருதுராஜ் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் டாப் ஆர்டரில் களமிறக்கியதற்கு, அவர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தான். ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்து கொள்வதற்கான நேரத்தில் வழங்க வேண்டும் என்று நினைத்தோம். இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் விராட் கோலியுடன் உரையாடினேன்.
விராட் கோலி என்னை ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ப மாற்றி கொள்வதற்கு, களத்தில் சிறிது நேரம் இருக்கமாறு அறிவுரை கூறினார். அந்த அறிவுரை எனக்கு இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. பேட்டிங் செய்த போது நல்ல ஷாட்களை ஆடிவிட்டு, ஃபார்முக்கு வந்ததாக உணர்ந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை பவர் பிளே ஓவர்களிலேயே வீழ்த்திவிட்டோம் என்று நினைக்கிறேன்.
அதேபோல் அடுத்த முறை இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரும் போது, பயணம் உள்ளிட்ட வசதிகளை திட்டமிட்டு செய்தால் நன்றாக இருக்கும். இதனை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கவனிப்பார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் ஆடம்பர வசதிகளை கேட்கவில்லை. அடிப்படை வசதிகளையே எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now