
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனையடுத்து எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு செல்வார்கள், எந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஏலத்திற்கு முன்னரே தங்கள் அணிகளில் இருந்து விலகி மற்ற அணிகளுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் விடுவித்து அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தாண்டு ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுத்து அணியில் சேர்த்தது.