
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய இந்திய அணியானது, டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை மறுநாள் (அக்.12) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தும். அதேசமயம் கடைசி டி20 போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் வங்கதேச அணி விளையாடவுள்ளது.