என்சிஏவிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா; இந்திய அணிக்கு பின்னடைவு!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்சிகிச்சைகாக என்சிஏவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையே ஆன போட்டியில் ஹர்திக் பாண்டியா தன் முதல் ஓவரை வீசும் போது, பவுண்டரி சென்ற பந்தை தடுக்க முயன்ற அவரது கணுக்காலில் கடும் வலி ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் அவரால் நடக்கக் கூட முடியவில்லை. இந்த நிலையில், அவர் போட்டிக்கு நடுவிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில் அவரது காயம் பெரிதாக இல்லை என்ற தகவல் வெளியானது. அதை வைத்து போட்டி முடிந்த போது கேப்டன் ரோஹித் சர்மா பாண்டியா காயம் லேசானது தான் எனக் கூறினார். ஆனால், கணுக்காலில் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவரால் பவுலிங் போடும் போது கடைசியாக காலை கீழே ஊன்றுவது கடினமாக இருக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Trending
அப்படி நடந்தால், பாண்டியாவால் பேட்டிங் மட்டுமே செய்ய முடியும், பந்து வீச முடியாது. மேலும், அவரது ஸ்கேன் முடிவுகளை மும்பையில் உள்ள சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் காண்பித்து கருத்து கேட்க உள்ளது பிசிசிஐ. அதன் முடிவிலேயே பாண்டியா நீக்கப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும். மேலும், அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு விரைந்துள்ளார் எனவும், அங்கே அவருக்கு மருந்துகள் செலுத்தி காயத்தின் தன்மையை பரிசோதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், லண்டனில் உள்ள சிறப்பு மருத்துவர் ஒருவரிடமும் பிசிசிஐ பேசி வருவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் குறைந்தபட்சம் இந்தியாவின் அடுத்த போட்டியில் அவரால் ஆட முடியாது என தெரிகிறது. ஹர்திக் பாண்டியா தற்போது அணியில் பந்துவீச்சாளராகவே அதிகம் செயல்படுகிறார். அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைப்பதே அரிது தான்.
அந்த வகையில் பாண்டியா பந்து வீசவில்லை என்றால் இந்திய அணிக்கு அது பெரும் இழப்பு ஆகும். காயம் லேசானது தான் என்றாலும் எந்தப் பயனும் இல்லாமல் அவரை ஆட வைத்து அதனால் அவர் காயம் பீல்டிங் செய்யும் போது இன்னும் பெரிதானால் பெரிய சிக்கலாக மாறி விடும். எனவே, அவர் அடுத்து இந்தியா ஆட உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இடம் பெற மாட்டார் என்றே கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now