
இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முதலே மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும் நீடித்தன. அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கியதோடு, குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது அந்த அணியில் உள்ள ஒருசில வீரர்கள் உள்பட ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்தது.
இதனால் ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு முறையும் களத்தில் டாஸ் நிகழ்விற்காக வரும் போது சொந்த அணி ரசிகர்களே கேலி செய்ததும் நடந்தது. போதாக்குறைக்கு அந்த அணி இந்த சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திதது. அதன்பின் கடந்த இரண்டு போட்டிகளாக அணியில் உள்ள ஒருசில பிரச்சனைகள் முடிவுக்கு வந்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தது.
இந்நிலையில் தற்போது கேப்டனாக ஹர்திக் பாண்டியா எடுத்த சில முடிவுகள் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது. குறிப்பாக இன்னிங்ஸின் 20ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா சிறப்பாக தொடங்கினாலும், கடைசி நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் உள்பட 20 ரன்களை வாரி வழங்கினார். இப்போட்டியில் சிஎஸ்கே அணியும் 20 ரன்கள் வித்தியாசத்திலேயே மும்பை அணியை வீழ்த்தியது.