
வங்கதேசம் சென்ற இந்திய மகளிர் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மிர்புரில் நடந்த மூன்றாவது போட்டி ‘டை’ ஆனது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத், நகிதா பந்தில் ‘கேட்ச்’ ஆனதாக, நடுவர் தன்விர் அகமது (வங்கதேசம்) அவுட் கொடுத்தார்.
ஆனால் பந்து கால் ‘பேடில்’ பட்டுச் சென்றதாக கூறிய ஹர்மன்பிரீத் கவுர், கோபத்தில் ‘ஸ்டம்சை’ அடித்தார். பின் நடுவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றார். இதுகுறித்து ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘‘போட்டியில் நடுவர்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினர். இது ஏமாற்றமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அடுத்த முறை வங்கதேசம் வரும் போது இதுபோன்ற நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வர வேண்டும்,’’ என்றார்.
அடுத்து கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒருநாள் தொடர் 1–1 என சமன் ஆனதால், இரு அணியினரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக வந்த வங்கதேச அணி வீராங்கனைகளைப் பார்த்து ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,‘‘ ஏன் நீங்கள் மட்டும் வந்துள்ளீர்கள். நடுவர்கள் தான் உங்களுக்காக போட்டியை ‘டை’யில் முடித்துக் கொடுத்தனர். அவர்களையும் கூப்பிடுங்கள், எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்தால் எங்களுக்கு நன்றாக இருக்கும்,’’ என்றார்.