
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியானது அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய மகளிர் அணியானது, நேபாள் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு இடம் முன்னேற்றி 11ஆம் இடத்திற்கும், ஷஃபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேற்கொண்டு ரிச்சா கோஷ் 4 இடங்கள் முன்னேறி 24ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனீ மற்றும் தஹ்லியா மெக்ராத் இருவரும் முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர். மேலும் மூன்றாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸும், நான்காம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும், 5ஆம் இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர்.