
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான (IN-W vs AU-W ODI) இந்திய மகளிர் அணியையும், பின்னர் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான (ICC மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025) இந்திய மகளிர் அணியையும் பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட இந்த இந்திய மகளிர் அணியில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஆகியோருடன் ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இளம் வீராங்கனைகளான ஸ்ரீ சாரணி, கிராந்தி கவுட் ஆகியோரும் இரு தொடர்களுக்குமான அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சயாலி சத்கரே, உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அமஞ்சோத் கவுர் உலகக்கோப்பை அணியில் வய்ப்பு பெற்றுள்ளார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா ஆஸ்திரேலியா மற்றும் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது பேசுபொருளாக மாறியுள்ளது.