WPL 2023: ஹாரிஸ், மெக்ராத் அதிரடியில் யுபி வாரியர்ஸ் வெற்றி; ஆர்சிபி, குஜராத் வெளியேற்றம்!
மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் நிர்ணயித்த 179 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 3ஆம் இடத்தில் இருக்கும் யுபி வாரியர்ஸ் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதின. ஆர்சிபி அணியும் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றி பாதையில் பயணிப்பதால் வெற்றி கட்டாயத்துடன் யுபி வாரியர்ஸை எதிர்கொண்ட குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் சோஃபியா டங்க்லி(23) மற்றும் லாரா வோல்வார்ட்(17) அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஹர்லீன் தியோல் 7 பந்தில் 4 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் களமிறங்கிய தயாளன் ஹேமலதா மற்றும் ஆஷ்லே கார்ட்னெர் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ஹேமலதா 33 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடிக்க, ஆஷ்லே கார்ட்னெர் 39 பந்தில் 60 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி.
Trending
இதையடுத்து, 179 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய யுபி வாரியர்ஸ் அணியின் டாப் 3 வீராங்கனைகளான தேவிகா வைத்யா (7), அலைஸா ஹீலி(12), கிரன் (4) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் டாலியா மெக்ராத்தும், கிரேஸ் ஹாரிஸும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து, 4வது விக்கெட்டுக்கு 78 ரன்களை குவித்தனர். மெக்ராத் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி 72 ரன்களை குவித்து கிரேஸ் ஹாரிஸும் ஆட்டமிழக்க, சோஃபி எக்லிஸ்டோன் 13 பந்தில் 19 ரன்கள் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார்.
இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யுபி வாரியர்ஸ் அணி எலிமினேட்டருக்கு தகுதிபெற்றது. புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் அணிகளில் ஒன்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிவிடும். மற்றொரு அணி எலிமினேட்டரில் விளையாடும். எனவே இந்த 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டதால் ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.
Win Big, Make Your Cricket Tales Now