
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்ராவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹசன் நவாஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதிலும் குறிப்பாக இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 45 பந்துகளில் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 105 ரன்களை விலாசினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தத் டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்காக ஹசன் சர்வதேச அளவில் அறிமுகமானார். அதன்படி இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்திருந்தார். இப்படியான சூழ்நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொண்ட அவர் 44 பந்துகள்ல் சதமடித்து அசத்தி தன்னுடைய திறனை நிரூபித்துள்ளார்.