டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கு இவர் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் விளாசல்!
ஐபிஎல் 16ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் அடம் தான் முக்கியமான காரணம் என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன. இன்று சென்னையில் நடக்கும் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டரில் மும்பையும் லக்னோவும் மோதுகின்றன. இறுதிப்போட்டி வரும் 28ஆம் தேதி அஹ்மதாபாத்தில் நடக்கிறது.
ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே ஆகிய சாம்பியன் அணிகளுடன், அறிமுக சீசனில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.
Trending
ஐபிஎல் தொடங்கியதிலிருந்து விளையாடிவந்தாலும், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறவில்லை. ஆர்சிபி அணியாவது கடுமையாக போராடி கடைசி லீக் போட்டியில் தோற்றதால் பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியாமல் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்து வெளியேறியது.
ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 போட்டிகளில் வெறும் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் விளையாடாததால் டேவிட் வார்னரின் கேப்டன்ஷியில் களமிறங்கிய டெல்லி அணி சோபிக்கவில்லை; படுமோசமாக சொதப்பியது. ரிஷப் பந்த் இல்லாததால் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருந்தது. பிரித்வி ஷாவும் சோபிக்கவில்லை. நல்ல ஃபார்மில் இருந்த அக்ஸர் படேலை கடைசிவரை சற்று மேலே பேட்டிங் இறக்கிவிடவில்லை அந்த அணி நிர்வாகம்.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “4 அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன. கடந்த பல சீசன்களாக கோப்பையை வென்றிராத 3 அணிகளும் பிளேஆஃபிற்கு முன்னேறவில்லை. பிளே ஆஃபிற்கு தகுதிபெறாத அணிகள் பிரச்னைகளை ஆராய வேண்டும். குறிப்பாக புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்த அணிகள் அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளின் பயிற்சியாளர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் பிரையன் லாரா ஆகிய இருவரும் கிரிக்கெட்டின் 2 கிரேட் பேட்ஸ்மேன்கள். ஆனாலும் அந்த அணிகள் தோற்றதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான பிரச்னை மொழி தான். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த அந்த பயிற்சியாளர்களுக்கும் உள்நாட்டிலிருந்து வந்த இளம் வீரர்களுக்கும் இடையே மொழி பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
யஷ் துல், பிரியம் கர்க், சர்ஃபராஸ் கான் ஆகிய டெல்லி வீரர்கள் எந்தவிதத்திலும் மேம்படாமல் இருந்ததற்கு, அவர்களால் ரிக்கி பாண்டிங்குடன் சரியாக பேசமுடியாததே காரணம். கம்யூனிகேஷன் பிரச்னையே அதற்கு காரணம். ரிக்கி பாண்டிங்கின் அடமும் காரணம். நல்ல ஃபார்மில் இருந்த அக்ஸர் படேலை பேட்டிங்கில் சற்று மேலே ப்ரமோஷன் செய்யவே இல்லை” என்று ரிக்கி பாண்டிங்கை விமர்சித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now