
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஹேசில்வுட் அப்போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் இத்தொடரின் கடைசி போட்டியிலும் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை.