
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கும் என்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்.
ஆனால் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வினால் மட்டும் சக வீரர்களுடன் பயணிக்க முடியவில்லை. அஸ்வினுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக குவாரண்டைன் செய்யப்பட்டார். நெகட்டிவ் என முடிவு வந்தால் தான் பயணம் செய்ய முடியும் என்பதால், அஸ்வின் இங்கிலாந்து டெஸ்டில் இருப்பாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் அஸ்வினின் உடல்நலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், அஸ்வின் தனது குவாரண்டைனை முழுவதுமாக முடித்துவிட்டார். அவரின் உடல்நலம் நன்றாக உள்ளது. அவர் வரும் ஜூலை 23 - 24ஆம் தேதிக்குள் இங்கிலாந்து சென்றுவிடுவார். இதற்கான கடைசி கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.