
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி பிரிஸ்பேனிலுள்ள புகழ்பெற்ற கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முதல் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டதுடன், பயிற்சி மேற்கொள்வதற்கும் அனுமதிக்கப்படாமல் இருந்தார். இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.