
இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன் ஆஷஸ் தொடரையும் இழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி மீது விமர்சனங்களும் அதிகரித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் லூயிஸ் விலகுவதாக இன்றைய தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக கிட்டத்திட்ட 9ஆண்டுகளாக வழிநடத்தி வந்த ஹீதர் நைட்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஹீதர் நைட், 199 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார். இதில் அவர் 134 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார். இதுதவிர்த்து 6 உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும், அதில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.