
டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிர பேட்டர் ஹென்ரிச் கிளாசென் தனது பெயரில் தனித்துவ சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். ‘
அந்தவகையில் இந்த போட்டியில் 22 பந்துகளை எதிர்கொண்ட ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 25 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இந்த போட்டியில் அவர் ஒரு சிக்ஸரை அடித்ததன் மூலம், நடப்பு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது சிக்ஸரை பூர்த்தி செய்து அசத்தியதுடன், ஒரு ஆண்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் இந்த சாதனையை படைக்கும் நான்காவது வீரர் மற்றும் முதல் வெஸ்ட் இண்டீஸ் அல்லாத கிரிக்கெட் வீரர் எனும் சாதனைகளையும் படைத்து அசத்தினார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இந்த ஆண்டு ஹென்றிச் கிளாசன் டி20 கிரிக்கெட்டில் 69 பவுண்டரிகளை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.