
டெல்லி அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ச் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் முடித்துள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்து அசத்திய ஹென்ரிச் கிளாசென் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய நிலையில், தற்சமயம் ஹென்ரிச் கிளாசென் அவரின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.