
சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இதனால் தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்டுகள் அல்லது 30 முதல்தர ஆட்டங்கள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இதற்கான விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய புதிய குழுவையும் பிசிசிஐ நியமிக்கவுள்ளது. அவர்களின் பரிந்துரையின் பேரில் தேர்வாகும் உறுப்பினர்களை பிசிசிஐ அறிவிக்கும்.