
16ஆவது சீசன் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்த லக்னோவை 4ஆவது இடம் பிடித்த மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. இதன்மூலம் நாளை நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. சென்னையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை கேமரூன் கிரீன் 41 (23) சூரியகுமார் யாதவ் 33 (2)) என முக்கிய வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 182/8 ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை துரத்திய லக்னோ சவாலான சேப்பாக்கம் மைதானத்தில் நெருப்பாக பந்து வீசிய மும்பைக்கு பதில் சொல்ல முடியாமல் 16.3 ஓவரில் 101 ரன்களுக்கு சுருண்டு இத்தொடரிலிருந்து வெளியேறியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் மே 1ஆம் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோவுக்காக விளையாடும் ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் பயிற்சியாளராக விராட் கோலி நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு கௌதம் கம்பீர் சண்டை போட்டது பெரிய சர்ச்சையாக மாறியது. அதை விட லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் செய்த சமாதானத்தால் பகையை மறந்து கை கொடுக்க வந்த விராட் கோலியிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்று நவீன் திமிராக சென்றது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அந்த நிலையில் லக்னோவுக்கு எதிராக குஜராத் வென்ற போது ரஷித் கான், சஹா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டினார்.