
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரது அதிரடியான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 325 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 18 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 103 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும், கேப்டன் லாரா வோல்வார்ட் - மரிஸான் கேப் இணை அபாரமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் மரிஸான் கேப் 114 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை போராடிய லாரா வோல்வார்ட் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 135 ரன்களைச் சேர்த்திருந்தார்.