
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. கடந்த டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில், நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற முடியாமல் இருந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்துகின்ற காரணத்தினால் பெஸ்ட் இண்டிஸ் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கிறது.
தற்பொழுது புதிய தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தங்களை மீண்டும் பழைய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டத்தில் இளைஞர்களிடம் முன்பு போல் கிரிக்கெட் ஆர்வம் இல்லை. அவர்கள் தடகள வீரர்கள் ஆகவோ இல்லை கூடைப்பந்து வீரர்களாகவோ உருவாகத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதில் கிரிக்கெட்டை விட அதிக பணம் கிடைக்கிறது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மெல்ல சரிந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது. மேலும் உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அவர்கள் ஒரே அணியாகத்தான் சரியாக விளையாட மாட்டார்கள், ஆனால் தனித்தனி வீரர்களாக உலகெங்கும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எனவே அவர்களுடைய பொருளாதார தேவைக்காக வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாட விரும்புகிறார்கள்.