
இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக சமீபக் காலத்தில் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா சில ஆண்டுகளுக்கு முன்பு காயமடைய, அவரது இடத்தில் மும்பை வீரரான வலது கை மிதவேகப்பந்துவீச்சாளர் இடதுகை பேட்ஸ்மேன் ஷிவம் துபே 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். மேலும் ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.
அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் எவ்வளவு சீக்கிரம் இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடருக்கும் வந்தாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவரது வீழ்ச்சியும் அமைந்திருந்தது. இந்த நேரத்தில்தான் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் போட்டியிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷிவம் துபேவை நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கியது.
அந்த இடத்திலிருந்து இவரது கிரிக்கெட் வாழ்க்கை வேறொரு இடத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, தற்பொழுது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறும் அளவுக்கு வந்திருக்கிறது. ஷிவம் துபே பெரிதாக கால்களை பயன்படுத்தி விளையாட மாட்டார். தன்னுடைய உயரத்தை ரீச்சை பயன்படுத்தி நின்ற இடத்தில் இருந்து பந்தை பலம் கொண்டு அடிக்கக்கூடிய வீரராகவே இருந்தார்.