
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் அடித்தன.
13 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பந்தின் சதத்தால் 198 ரன்கள் அடித்தது. மொத்தமாக இந்திய அணி 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. 212 ரன்கள் என்ற இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
இந்த போட்டியின் 2ஆவது இன்னிங்ஸின் போது, தென் ஆப்பிரிக்க கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தபோது அஸ்வின் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கினார் எல்கர். கள நடுவர் எராஸ்மஸ் அதற்கு அவுட் கொடுத்தார். எல்கர் அதை ரிவியூ செய்தார். கிட்டத்தட்ட ஃபுல் லெந்த்தில் விழுந்த அந்த பந்து, பால் டிராக்கிங்கில் அதிக பவுன்ஸ் ஆகி ஸ்டம்ப்புக்கு மேல் செல்வதாக காட்டியது. அதனால் டீன் எல்கர் தப்பினார்.