
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டடத்தை எட்டியுள்ளது. இதில் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்விசிபில் அணியானது முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஓவல் இன்விசிபில் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் இறுதிப்போட்டிக்கு முன்னதாக தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவருக்கு காயமோ அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ இந்த தொடரில் இருந்து வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இங்கிலாந்து அணியானது இன்னும் சில தினங்களில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கஸ் அட்கின்சன் பார்க்கப்படுகிறார். இதன்காரணமாகவே அவர் தற்சமயம் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதுடன், தனது பயிற்சியை மேற்கொள்வதற்காக இங்கிலாந்து அணியுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.