
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேர்ந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன அஸ்வின் ஓய்வு தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினார். அதிலும் குறிப்பாக ஃபேரவல் டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் அவர் ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஏனெனில் இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.