
இந்தியாவில் கடந்த 2008ஆம் முதல் அண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2024 ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் துபாயில் இன்னும் சில நாட்களில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. அந்த ஏலத்திற்கு பின்னர் ஒவ்வொரு அணியுமே தங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பட்டியலையும் முழுவதுமாக வெளியிடும்.
அதை தவிர்த்து தற்போதே டிரேடிங் முறையில் சில வீரர்கள் அணிமாற்றமும் செய்துள்ளனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா மும்பை அணியால் டிரேடிங் மூலம் வாங்கப்பட்டுள்ளதால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். கொல்கத்தா அணிக்காக தனது அறிமுக சீசனில் விளையாடி வந்த ஷுப்மன் கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அவரை ஏலத்திற்கு முன்பாக நேரடியாக அணியில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அவருக்கு ஒரு பெரிய தொகையையும் சம்பளமாக வழங்கி அவரின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர்.
அதற்கு பலனாக அறிமுக ஆண்டிலேயே குஜராத் அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த ஆண்டு குஜராத் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அவரது இந்த அபாரமான திறமை காரணமாக தற்போது அவருக்கு குஜராத் அணி கேப்டன் பதவியையும் வழங்கி உள்ளது.