ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் - கிரன் மோர் புகழாரம்!
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் என்று முன்னாள் வீரர் கிரன் மோர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே அபாரமாக விளையாடி கோப்பையை வென்றது. அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, அதே சாதனையை படைத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.
Trending
பேட்டிங், பவுலிங்கில் பாண்டியா அசத்தியது பெரிய விஷயமல்ல. ஆனால் கேப்டன்சி அனுபவமே இல்லாத பாண்டியா, இந்த சீசனில் முதிர்ச்சியுடனும் பக்குவத்துடனும் தெளிவான கேப்டன்சி செய்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஆக்ரோஷமான குணாதிசயத்தை கொண்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட நிலையில், அவரது உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தவில்லை. அமைதியாக, நிதானமாகவே செயல்பட்டார்.
இந்த சீசனில் பேட்டிங்கில் 3-4ஆம் வரிசைகளில் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய பாண்டியா, தனது பவுலிங்கின் தேவை அணிக்கு இருக்கிறது என்று அவர் கருதியபோது மட்டுமே பவுலிங் செய்தார். மிகச்சிறப்பாக பந்துவீசினார். ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் அசத்தினார்.
களவியூகம், வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப், கேரக்டர் என அனைத்திலுமே ஒரு தேர்ந்த கேப்டனாக தெரிந்தார். ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனுக்கான ரேஸில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருக்கும் நிலையில், அவர்களை ஓவர்டேக் செய்து ஹர்திக் பாண்டியா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
அந்தளவிற்கு ஒரு கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டார். ஒரு கேப்டனாக முன்னாள் வீரர்கள் பலரையும் கவர்ந்தார் ஹர்திக் பாண்டியா. அந்தவகையில், இந்திய முன்னாள் வீரர் கிரன் மோரையும் கவர்ந்துள்ளார் பாண்டியா.
பாண்டியா குறித்து பேசிய கிரன் மோர், “எப்போதுமே எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைப்பவர் ஹர்திக் பாண்டியா. பாண்டியா இப்போது 4 பரிமாண (4டி) பிளேயர். முன்பு 3டி பிளேயராக இருந்தார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தி 3டி பிளேயராக இருந்த பாண்டியா இப்போது நல்ல கேப்டனாகவும் திகழ்வதால், 4டி பிளேயராக உருவெடுத்துள்ளார். அவரை மாதிரியான ஒரு திறமையான வீரரை இந்திய அணி பெற்றிருப்பதற்கு பெருமைகொள்ள வேண்டும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now