
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு புதிய தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கர், ஆசியக் கோப்பைக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார். இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் பேட்டிங் வரிசையில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் விளையாடக் கூடியவர்கள்.
ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது. இந்த தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றி இருந்தது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இந்திய அணியின் மிடில் வரிசை பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முயற்சி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் வெளியில் இருந்து பலமாக வைக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதாக ஒரு விமர்சனம் தொடர்ச்சியாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி இலங்கைக்கு புறப்பட்டு சென்று இருக்கிறது. இந்த அணியில் காயத்தில் இருந்து திரும்பிய கேஎல் ராகுல் செல்லவில்லை. மேலும் அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். தற்பொழுது இதுவும் ஒருபுறத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.