
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் இடம் என்பது கடந்த சில ஆண்டுகளாக தலைவலி கொடுக்கும் ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது. மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லங்கர் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு ஒரு நிரந்தரமான தொடக்க ஜோடி அவர்களுக்கு அமையவில்லை. டேவிட் வார்னர் ஒரு இடத்தை தனதாக்கினாலும் கிறிஸ் ரோஜர்ஸ், உஸ்மான் கவாஜா, கேமரூன் பேங்க்ராஃப்ட், மேட் ரென்ஷா, மார்கஸ் ஹேரிஸ் என வீரர்கள் மாறிக்கொண்டே இருந்தனர்.
கடந்த 2-3 ஆண்டுகளாகத்தான் கவாஜாவின் எழுச்சி அவர்களுக்கு ஒரு நிலையான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரோடு டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் கவாஜாவின் ஓப்பனிங் பார்ட்னரை உறுதி செய்வது அவசியம் ஆனது. இந்த இடத்தில் பல குழப்பங்கள் நிலவியது. ஒருசில இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவின் முதல் தர தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் ஓரளவு நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் தனித்துத் தெரியும் அளவுக்கு அவர்களின் எண்கள் இல்லை. அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கேமரூன் பேங்க்ராஃப்ட் தொடக்க வீரராக களமிறக்கப்படவேண்டும் என்றார். மேத்யூ ஹெய்டனோ மேட் ரென்ஷாவின் பெயரை முன்மொழிந்தார். சைமன் கேடிச் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கேமரூன் கிரீனை ஓப்பனராகக் களமிறக்கவேண்டும் என்றார். மிட்செல் மார்ஷின் சமீபத்திய எழுச்சியின் காரணமாகவும், அவரது ஃபிட்னஸ் பிரச்சனைகள் காரணமாகவும் கிரீன் ஒருசில போட்டிகளில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறாமல் போனார்.