
சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வரிசையில் 2023இல் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பைக்கு பாதுகாப்பு காரணங்களால் செல்ல முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கு எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் அதே 2023இல் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை பங்கேற்க உங்கள் நாட்டுக்கு நாங்களும் வரமாட்டோம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
இதனால் அனல் பறந்து வரும் இந்த விவாதத்திற்கு மத்தியில் கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த 2022 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை லீக் போட்டியில் மோதின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அப்போட்டியில் வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி காலத்திற்கும் மறக்க முடியாத சரித்திர வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார்.