2 மணிக்கு தூங்கி 5 மணிக்கு மைதானத்திற்கு வருகிறேன் - சர்ஃபராஸ் ஓபன் டாக்!
தனது உடல் பருமன் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்குவார் என சர்ப்ராஸ் கான் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். இதற்கு ஏற்ற வகையில் ரஞ்சி கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி பல்வேறு சாதனைகளை சர்ஃபராஸ் கான் படைத்திருக்கிறார்.
குறிப்பாக டான் பிராட்மேனுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையையும் சர்ஃபராஸ் கான் படைத்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு வழங்க தேர்வு குழுவினர் மறுத்து வருகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் பெரிய காரணம் உடல் பருமனாக இருக்கிறார் என்பதுதான்.
Trending
இது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள கவாஸ்கர், உங்களுக்கு ஒல்லியான வீரர் தான் வேண்டுமென்றால் பேஷன் ஷோக்கு செல்லுங்கள் என காட்டமாக பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் தனது உடல் பருமன் குறித்து சர்ஃபராஸ் கான் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “என் உடல் பருமன் குறித்து நிறைய பேச்சு எழுந்ததை நான் தற்போது தான் அறிந்தேன். நான் ரஞ்சி கிரிக்கெட்டில் மிகவும் பிசியாக விளையாடிக் கொண்டிருந்தேன். எனவே என்னைப் பற்றி என்ன பேசினார்கள் என்று அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு வீரருக்கும் உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம் என்பதை நான் அறிவேன். இதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். நான் கடைசி ரஞ்சிப் போட்டியில் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பும் போது இரவு மணி இரண்டு ஆகிவிட்டது.
எனினும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் காலையில் 5 மணிக்கு எல்லாம் எழுந்து மைதானத்திற்கு சென்று பயிற்சியை தொடங்கி விட்டேன். கிரிக்கெட்டுக்கான எனது உடல் தகுதி சரியான அளவிலே இருக்கிறது. மைதானத்தில் ஓடும் போது கூட நான் நன்றாக தான் செயல்படுகிறேன். ரஞ்சி மற்றும் ஐபிஎல் தொடரில் உடல் தகுதிக்கான பயிற்சியை நான் சிறப்பாக மேற்கொண்டு வருகிறேன்.
தற்போது கூட டெல்லி கேப்பிடல்ஸ் அணி உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக டெல்லியில் 14 நாட்கள் முகாம் வைத்திருந்தார்கள். அதிலும் நான் பங்கேற்றேன்.என் கையில் என்னென்ன எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் நான் சிறப்பாகவே செய்து வருகிறேன். தற்போது என்னுடைய கவனம் எல்லாம் என்னுடைய பேட்டிங் ஃபார்மில் தான் இருக்கிறது. என்னுடைய பார்மை பயன்படுத்திக் கொண்டு நான் முடிந்தவரை சிறப்பாக விளையாட வேண்டும்.
ஏனென்றால் நாம் பார்மை தொலைத்து விட்டோம் என்றால் அது நமக்கு கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில சிறந்த வீரர்களுக்கெல்லாம் அணியில் தாமதமாகவே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.சூரியகுமார் யாதவை நீங்கள் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டாலே உங்களுக்கு தெரியும் .அவர் என்னுடைய சிறந்த நண்பன்.
எப்போதும் பேட்டிங் திறன் குறித்து நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவரும் தாமதமாக தான் இந்திய அணிக்குள் வந்தார். தற்போது அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். எனவே நானும் என்னுடைய நேரத்திற்காக காத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அதுவரை என்னுடைய பார்ம் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் உழைத்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now