இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களின் முடிவில் 191 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன் காரணமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக ஐந்தாவது வீரராக களமிறங்கி 9 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 31 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 19ஆவது ஓவரில் இரண்டு சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரி என அதிரடியில் வெளுத்து கட்டினார்.