
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இதில் அண்மையில் நடந்து முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 11 மாதங்களாக காயத்தால் ஓய்வில் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்றைய போட்டியின் மூலம் கேப்டனாக மீண்டும் களமிறங்குகிறார். இதனிடையே நேற்று நடைபெற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,“நான் ஒய்வில் இருந்த போது டி20 போட்டியைக் காட்டிலும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கே என்னை தயார்படுத்தி கொண்டிருந்தேன்.
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தான் 10 ஓவர், 12 ஓவர் மற்றும் 15 ஓவர்கள் என தொடர்ந்து வீசினேன். பயிற்சியின் போது அதிக ஓவர் வீசிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் எங்கிருந்து விட்டேனோ அங்கிருந்து தொடங்க ஆசைப்படுகிறேன். அதற்காக கடுமையாக நான் என்னுடைய உழைப்பை போட்டிருக்கிறேன்.