
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியானது மழை காரணமாக ஏற்பட்ட தாமதத்தினால் 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானதூ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. இதில் கேகேஆர் அணி தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களையும், நிதீஷ் ரானா 33 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நொக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷான் 40 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கேகேஆர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.