
ஐபிஎல் 2022 தொடரில் ஆரம்பம் முதலே பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவிற்காகவும் ஐபிஎல் தொடரிலும் ரன் மெஷினாக எதிரணிகளைப் பந்தாடி பல சாதனைகளைப் படைத்து வந்த அவர் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்தார்.
ஆனால் அதன்பின் அவரின் பேட்டிங்கில் ஏற்பட்ட இமாலய சரிவிலிருந்து இதுவரை மீள முடியாமல் தவிக்கும் அவர் இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் வகித்த கேப்டன்ஷிப் பொறுப்பு தமது ஆட்டத்தை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அந்த பதவிகளிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி கடந்த ஜனவரி மாதம் மொத்தமாக முழுக்கு போட்டார்.
அத்துடன் உலக கோப்பையையும் ஐபிஎல் கோப்பையை வாங்கி தர முடியவில்லை என்ற விமர்சனத்தாலும் பாதிக்கப்பட்ட அவர் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்ததால் சுதந்திரப் பறவையாக விளையாடி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தடுமாறிய அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 3 கோல்டன் டக் அவுட்டாகி படுமோசமான பார்மில் சிக்கியுள்ளார்.