ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக ஆட வேண்டும் - ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் இனி வரும் சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே விளையாட வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சாளராக பர்ப்பிள் தொப்பியினை கைப்பற்றியிருந்தார். 31 வயதாகும் ஹர்ஷல் படேல் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இதுவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் அவருடைய கிரிக்கெட் கரியரையே மாற்றிய ஆண்டாக கடந்த ஆண்டு இருந்தது. ஏனெனில் கடந்த சீசனில் மட்டும் 32 விக்கெட்களை அவர் வீழ்த்தி பிராவோவின் சாதனையை சமன் செய்து இருந்தார்.
Trending
அவருடைய ஸ்லோ பால்களும் எதிர்பாராத நேரத்தில் யார்க்கர் வீசுவது போன்ற சில திறன்களை அவர் வைத்திருப்பதனால் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். இந்நிலையில் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தியும் அவரை பெங்களூரு அணி தக்கவைக்காதது குறித்து பல கருத்துக்கள் இருந்து வந்தன. இந்நிலையில்தான் பெங்களூர் அணியால் தான் ஏன் தக்க வைக்கப் படவில்லை என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பெங்களூர் அணி என்னை தக்கவைக்காதது குறித்து அணியின் பயிற்ச்சியாளர் மைக் ஹசன் என்னிடம் தொடர்பு கொண்டார். மேலும் மெகா ஏலத்தின் போது பணம் தேவை என்பதற்காகவே பர்ஸ் மேனேஜ்மென்ட்க்காக என்னை தக்க வைக்க வில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் மீண்டும் என்னை ஏலத்தில் எடுக்க நினைப்பார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. என்னுடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் கரியரையும் மாற்றிய ஆண்டு சென்ற ஆண்டு தான்.
நான் மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன். நான் பெங்களூர் அணிக்காக விளையாடுவதற்கு முன்னர் டெத் ஓவர்களை வீசியது கிடையாது. ஆனால் என்னை நம்பி பெங்களூர் அணி கடந்த ஆண்டு டெத் ஓவர்களை வீச வைத்தது. அவர்கள் அளித்த அந்த நம்பிக்கைதான் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது.
மீண்டும் ஒரு முறை பெங்களூர் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த ஹர்ஷல் படேல் 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now