மார்ட்டின் கப்திலை மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும் - இயன் ஸ்மித்!
இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் சீனியர் வீரர் மார்டின் கப்திலை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கருத்து கூறியுள்ளார்.
ஐசிசியின் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளும் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்துவருகின்றன. கடைசியாக நடந்த கடந்த 2 ஒருநாள் உலக கோப்பைகளிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்தும் கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி இந்த முறையாவது முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் ஃபைனல் வரை சென்ற நியூசிலாந்து கிட்டத்தட்ட கோப்பையை வென்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதிகாரப்பூர்வமாக கோப்பையை வெல்லவில்லை. 2019 உலக கோப்பையில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான ஃபைனல் டிராவில் முடிந்தது. இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரும் டை ஆக, பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
Trending
இந்த ஆண்டு உலக கோப்பை இந்தியாவில் நடக்கும் நிலையில், இந்த உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது நியூசிலாந்து அணி. இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணியின் சீனியர் மற்றும் அதிரடி வீரரான மார்டின் கப்திலை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கருத்து கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்தில், 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,346 ரன்களையும், 122 டி20 போட்டிகளில் விளையாடி 3,531 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த மிகச்சில வீரர்களில் கப்திலும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித்துக்கு (264) அடுத்து 2ஆவது அதிகபட்ச ஸ்கோருக்கு சொந்தக்கார வீரர் மார்டின் கப்தில் (237) தான்.
அப்பேர்ப்பட்ட அதிரடி வீரரான மார்டின் கப்தில் நியூசிலாந்து அணியிலிருந்து அண்மைக்காலத்தில் ஓரங்கட்டப்பட்டார். 36 வயதான கப்திலின் கிரிக்கெட் கெரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்திருந்தார். ஜனவரியில் இந்தியாவிற்கு வந்து ஒருநாள் தொடரில் ஆடிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் இடம்பெறவில்லை. இளம் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் தான் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சரியாக ஆடாமல் 39, 5 மற்றும் 2 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் மார்டின் கப்டிலை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இயன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய இயன் ஸ்மித், “ஃபின் ஆலன் ஃபார்முக்கு வந்து ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் என்னதான் ஸ்கோர் செய்தாலும், என்னை பொறுத்தமட்டில் நான் மார்டின் கப்திலைத்தான் தேர்வு செய்வேன். கப்திலின் டைம் இன்னும் முடியவில்லை. அவரது வேலையை அவர் இன்னும் செய்து முடிக்கவில்லை. அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர் என்ற முறையில் கப்தில் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆட வேண்டும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now