
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை திறமையான ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் சிறப்பாக விளையாடி 291/5 ரன்கள் சேர்த்தது.
அந்த அணிக்கு தொடக்க வீரர் ரஹ்மனுதுல்லா குர்பாஸ் 21 ரன்களில் ஆட்டமிஸ்ழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். அவருடன் மிடில் ஆர்டரில் கை கொடுத்த ரஹ்மத் ஷா 30 ரன்களும் கேப்டன் ஷாஹிததி 26 ரன்களும் ஓமர்சாய் 22 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய இப்ராஹிம் ஜாட்ரான் சதமடித்து 7 பவுண்டரி 3 சிக்சருடன் 129 ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற வரலாற்றையும் படைத்த அவருடன் கடைசி நேரத்தில் ரசித் கான் 35 ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.