
கடந்த மாதம் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் நடந்து முடிந்த சாம்பியன் ஸ்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் ரன்களைக் குவித்ததுடன், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.