
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த இலங்கை விளையாட்டுத்துறை தங்களுடைய கிரிக்கெட் வாரியத்தை கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல தவறிய நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில், பிறகு அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக இலங்கை அரசின் விளையாட்டு துறை அறிவித்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்தது.
ஏனெனில் ஒரு வாரியத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை வாரியத்தை கலைத்து, வாரிய பிரச்சனையில் தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்திருந்தது.