
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 8ஆவது முறையாக இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான்.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர், “இந்த உலகக்கோப்பை போட்டி ஐசிசி சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் இல்லை. இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் போல் உள்ளது. பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக எந்த கோஷமும் வரவில்லை. இதனை நான் தோல்விக்கு காரணமாக கூறவில்லை. இந்திய அணியை மீண்டும் இறுதிப்போட்டியில் சந்திக்க ஆதரவாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்றைய நாளில் அவரது குற்றச்சாட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதைவிட மிக முக்கியமாக இப்படியான விஷயங்களை கூறி பாகிஸ்தான் அணியின் படுதோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்று வாசிம் அக்ரம் மிகக் கடுமையான கோபத்தை மிக்கி ஆர்தர் மீது வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.