
ஐசிசியின் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். அதிலும் ஆரம்பம் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
மேலும் இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 28 ரன்களில் இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து சதத்தை நெருங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 80 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதியின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.