உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அந்த தகுதிச்சுற்றில் பங்கேற்கும் அணிகள், ஆட்டங்கள் குறித்த அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ‘ஏ’, ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் இதர அணிகளுடன் மோதும். இதன் நிறைவில் இரு குரூப்களிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பா் சிக்ஸ்’ நிலைக்கு தகுதிபெறும்.
Trending
சூப்பா் சிக்ஸுக்கு வரும் அணிகள், முன்னதாக குரூப் சுற்றில் பெற்ற புள்ளிகளும் கணக்கில் கொள்ளப்படும். ஆனால், அந்த அணிகள் சூப்பா் சிக்ஸுக்கு தகுதிபெறத் தவறிய இதர அணிகளுடனான மோதலில் பெற்ற புள்ளிகள் கணக்கில் கொள்ளப்படாது. சூப்பா் சிக்ஸ் நிலையின் ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு அதில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிச்சுற்றில் மோதும். அந்த இரு அணிகளுமே உலகக் கோப்பை பிரதான சுற்றுக்கு தகுதிபெறும்.
குரூப் சுற்றில் இருந்து சூப்பா் சிக்ஸ் நிலைக்கு முன்னேறியவை போக, ஒவ்வொரு குரூப்பிலும் தலா 2 வீதம் எஞ்சியிருக்கும் 4 அணிகளும், பிளே-ஆஃப் நிலைக்கு வந்து அதில் ஒன்றுடன் ஒன்று மோதும். சூப்பா் சிக்ஸ் மற்றும் பிளே-ஆஃப் நிலை ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு 10 அணிகளும் வரிசைப்படுத்தப்பட்டு, உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதிப்பெறும்.
இந்நிலையில் இத்தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானகா தலைமையிலான இந்த அணியில் குசால் மெண்டிஸ், திமுத் கருணரத்னே, பதும் நிஷங்கா, சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா ஆகியோருடன் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட மதீஷா பதிரானாவும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் அனுபவ வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமல் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இலங்கை அணி: தசுன் ஷனக (கே), குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்னே, பதும் நிஷங்கா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன, மதீஷா பத்திரானா, துஷான் ஹேமந்தா
Win Big, Make Your Cricket Tales Now