
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரையும் சமன்செய்திருந்தன.
இதனையடுத்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரனது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதில் இந்திய அணியின் ஷுப்மன் கில் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசம் இரண்டாம் இடத்திலும், ரோஹித் சர்மா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இதுதவிர்த்து இந்திய வீரர்கள் விராட் கோலி 5ஆம் இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 8ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்நிலையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சதமடித்து அசத்திய வெஸ்ட் இண்டீஸின் கேசி கார்டி 20 இடங்கள் முன்னேறி 16ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் ஒரு இடம் முன்னேறி 17ஆம் இடத்தையும், ஆண்ட்ரூ பால்பிர்னி 8 இடங்கள் முன்னேறி 48ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.