
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏற்கெனவே நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள இவ்விரு அணிகளும், 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதிப்பெரும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.