
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் நிஷங்காவுடன் இணைந்த சதீரா சமரவிக்ரமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதும் நிஷங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா இருவரும் தலா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்வதற்கு கால தாமதம் செய்ததாக கூறி ஐசிசி விதிப்படி கள நடுவர் அவுட் என அறிவித்தார். இதனால் மைதானத்தில் சிறுது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன்பின் நடுவரின் முடிவை ஏற்று மேத்யூஸ் பெவிலியன் திரும்பினார்.